Home இலங்கை கல்வி கல்வி நடவடிக்கையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள்: மாணவர்களுக்கு ஏற்படவுள்ள நன்மை

கல்வி நடவடிக்கையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள்: மாணவர்களுக்கு ஏற்படவுள்ள நன்மை

0

அடுத்தாண்டு அமுலாகவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பூர்வாங்க ஆலோசனைக் கோவை ஒன்றை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஒன்பது துறைகள் சார்ந்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் தாய்மொழி, ஆங்கில மொழி, இரண்டாவது தேசிய மொழி, கணிதம், சமயம் மற்றும் ஒழுக்கக் கல்வி, ஆரம்ப கல்வி மற்றும் சுற்றாடல்சார் செயற்பாடுகள், ஒன்றிணைந்த அழகியல் கல்வி, சுகாதார மற்றும் உடற்கல்வி போன்றவை அவற்றுள் சிலவாகும்.


பாடத்திட்டத்தில் மாற்றம்

அடுத்தாண்டு தொடக்கம் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளுக்குரிய பாடசாலை நேரத்தில் மாற்றம் இல்லை.

எனினும், ஐந்தாம் வகுப்புக்குரிய கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30இற்குக் தொடங்கி பிற்பகல் இரண்டு மணி வரை நீடிக்கும். ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை முடியும் வரையில் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும்.

தரம் ஆறு தொடக்கம் உயர்தர வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்பகல் இரண்டு மணி வரை நடைபெறும். நாளாந்த பாடசாலை நேரம் 50 நிமிடங்களைக் கொண்ட ஏழு காலப்பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

தேசிய கல்வி நிறுவகம்

பாடசாலை நேரசூசியைத் தயாரித்தல், பாடசாலை நடத்தப்பட வேண்டிய நேரம் பற்றிய சுற்றுநிருபம் விரைவில் வெளியாகவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆலோசனைகளும் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆறாம் வகுப்பில் இருந்து தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், வாழ்க்கைக்கான தொழில்நுட்பம், தொழில் முயற்சியாண்மை மற்றும் நிதி எழுத்தறிவு ஆகிய விடயங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ஆறாம் வகுப்புப் பிள்ளைகளுக்கான பழைய பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களுக்குப் பதிலாக புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் தேசிய கல்வி நிறுவகம் தொகுத்த ‘மொடியூல்கள்’ (Modules) விரைவில் வழங்கப்படவுள்ளன.

NO COMMENTS

Exit mobile version