முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட( Eknaligoda) தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இணைய செய்தித்தளம் ஒன்றில் கேலிச்சித்திர ஓவியராகவும் (கார்ட்டூனிஸ்ட்), அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றிய பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஹோமாகம நகரில் கடத்திச் செல்லப்பட்டார்.
பிரகீத் எக்னெலிகொட
அவரது கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுச் சேவை அதிகாரிகள் 9 பேர் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் தடைப்பட்டிருந்த நிலையில், அந்த விசாரணைகள் கடந்த 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் இது பற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் உரியவாறு நிறைவு செய்யப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் என வாக்குறுதியளித்திருக்கின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
பிரகீத் எக்னெலிகொடவின் வலிந்து காணாமல் ஆக்கப்படல் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவரது குடும்பத்தினர் 14 ஆண்டுகளாகத் தவிப்புடன் காத்திருக்கின்றார்கள்.
பக்சார்பற்ற வழக்கு விசாரணைகள்
எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம்.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் எவரெனினும், அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவத் தொடர்புகளுக்கு அப்பால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் – என்றும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.