Home இலங்கை சமூகம் யாழில் கல்லுண்டாய் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர்

யாழில் கல்லுண்டாய் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர்

0

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு தீ
வைத்ததனால் குறித்த வீதியில் பயணித்த முதியவர் ஒருவர்
மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கல்லூண்டாயில் உள்ள, யாழ். மாநகர சபையினரின் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும்
பகுதிக்கு இன்று (04.10.2024) காலை தீ வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புகை வீதியெங்கும்
பரவியது.

நோய் அபாயம்

இதன்போது, துவிச்சக்கரவண்டியில் குறித்த வீதியால் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க
முதியவர் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் துவிச்சக்கர வண்டியை
நிறுத்திவிட்டு வீதியோரத்தில் அமர்ந்திருந்ததாகவும், வீதியால் சென்றவர்கள்
அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்க நிலையை போக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு அடிக்கடி தீ மூட்டும் சம்பவங்கள்
இடம்பெறுகின்றன. மருத்துவமனை கழிவுகளும் அதில் உள்ளடங்குவதனால், அந்த புகையை
சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படக்கூடிய அபாயகரமான
சூழ்நிலைகளும் காணப்படுகின்றன.

குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டுவதால், வீதி எங்கும் புகை
மூட்டமாகி வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்கொள்வதாக
ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

மக்களது கோரிக்கை

இருந்தும் கூட இவ்வாறான
சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமையால் உரிய தரப்பினர் அசமந்தமாக
உள்ளனரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

குறித்த பகுதியானது மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படுகின்றது.
இருப்பினும் யாழ்ப்பாண மாநகர சபையினரே அந்த பகுதியில் கழிவுகளை
கொட்டுகின்றனர்.

எனவே, யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளரும் மானிப்பாய் பிரதேச
சபையின் செயலாளரும் இது குறித்து அதிக கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பது மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version