எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை, பெப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாரச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவும் (ECSL) தபால் திணைக்களமும் இணைந்து அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்றைய (08) தினம் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
வாக்காளர் அட்டைகள்
இந்த நிலையில், குறித்த வாக்காளர் அட்டைகள் கிடைத்தாலும் கிடைக்கப்பெறாவிட்டாலும் வாக்களிப்பதற்கு அது தடையாகாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையம் எது என தெரிந்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்காளர் அட்டையின் மூலம் வாக்களிப்பு நிலையம் மற்றும் எண்ணை அறிந்து கொள்ள வழியமைக்கும் என்ற போதிலும் அட்டை கிடைக்கப் பெறாமை தேர்தலில் வாக்களிப்பதற்கு பாரதூரமான தடையாக அமையாது என ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.