இலங்கையின் பிரபல தனியார் ஊடக வலையமைப்பொன்று தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை அந்த ஊடக வலையமைப்பு புறக்கணித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்பதால், உடனடியாக இது குறித்து கவனம் செலுத்துமாறு தேர்தல் ஆணையம் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
வேட்பாளர்களை அவமதிக்கும் செயற்பாடு
ஒரு வேட்பாளரை தனிப்பட்ட முறையில் விளம்பரப்படுத்த தனது பெரும்பாலான நேரங்களை ஊடகம் ஒதுக்கியுள்ளதாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சில நிகழ்ச்சிகள் மூலம் மற்ற வேட்பாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஊடக நெறிமுறைகளுக்கு முரணான கருத்துகளை அவர்கள் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் அனைத்தையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, இந்த விடயங்களை உடனடியாக கவனித்து சரியான ஊடக பாதியில் ஈடுபடுமாறுஎச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்ட மீறல்
“பொது அலைவரிசைகளிலும், ஒளிபரப்பு நேரங்களிலும் தனக்கு விருப்பமான கட்சிகளை ஊக்குவிப்பதாகவும், பிற கட்சிகளை அவமதிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தகைய பின்னணியில், “மேலே குறிப்பிட்டுள்ளபடி உங்கள் நிறுவனம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால், அது பொது அலைவரிசைகள் மற்றும் பொது ஒளிபரப்பு நேரங்களை தவறாகப் பயன்படுத்துவதாகும்.
இதனால் அது தேர்தலின் பொது நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவதாகும்.
எனவே, உங்கள் அலைவரிசையைப் சரியான முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான முறைப்பாடுகள் இடம்பெறாத வகையில் ஒளிபரப்பப்படவேண்டும் என்பதுடன் மேலதிக தகவல்களுக்காக மேற்கூறிய ஊடக சட்டத்தின் வர்த்தமானிபிரதியை இணைத்து உள்ளேன்” என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.