Home இலங்கை அரசியல் எதிர்வரும் தேர்தல்கள் அரசுக்கு எதிரானதாக அமையும்: நாமல் ஆரூடம்

எதிர்வரும் தேர்தல்கள் அரசுக்கு எதிரானதாக அமையும்: நாமல் ஆரூடம்

0

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்கள் அரசுக்கு எதிரானதாக அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசின் மீதான மக்களின் நம்பிக்கை
வெகுவாகச் சிதைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (12) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார விவகாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன்
ஒன்றிணையலாம். இது தொடர்பில் உள்ளக மட்டத்தில் பேச்சில் ஈடுபட்டுள்ளோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம்
செலுத்தியுள்ளோம்.

 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம்
சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரிகள் திருத்தம் செய்யப்படுகின்றது.

காலையில்தான் வரிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.பொருளாதார
விவகாரத்தில் அரசு எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை அறியமுடியவில்லை.

மதுபான பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எனக்கொன்றும்
பிரச்சினையில்லை, ஏனெனில் நான் மது அருந்துவதில்லை.

மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள்
அதிகரிக்கப்படும். அது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

பல்வேறு காரணிகளைக் குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு
விலகிச் சென்றவர்கள் இன்று அரசியலில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம்.
இது தொடர்பில் உள்ளக மட்டத்தில் பேச்சில் ஈடுபட்டுள்ளோம்.

குற்றச்சாட்டுக்கள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அவதானம்
செலுத்தியுள்ளோம். கட்சி என்ற ரீதியில் பலமடைவதற்கான அனைத்து திட்டங்களையும்
செயற்படுத்தியுள்ளோம்.

அநுர அரசின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது.

ஆகவே,
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்கள் அரசுக்கு எதிரானதாக அமையும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ராஜபக்சக்கள் மீது
பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தற்போது அவர்தான் ஜனாதிபதி. ஆகவே எம்
மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்க
வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.

நான் சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு தோற்றிய விதம் தொடர்பில் அமைச்சர் வசந்த
சமரசிங்க நாடாளுமன்றத்தில் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதாகக்
குறிப்பிட்டேன். இதுவரை அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றார்.

NO COMMENTS

Exit mobile version