மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் (Public Utilities Commission) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்திருத்தம் தொடர்பான முன்மொழிவானது இன்று (06) வழங்கப்படவுள்ளதாக மின்சார சபை (Ceylon Electricity Board) தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது மின் கட்டணத்தை வருடத்திற்கு நான்கு முறை திருத்தியமைக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது. ஆனால் 2023ல் மூன்று முறையும், இந்த ஆண்டு இரண்டு முறையும் மின் கட்டணம் திருத்தப்பட்டது.
6 மாதங்களுக்கான கட்டண திருத்தம்
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் வருடத்திற்கு இரண்டு முறை மின் கட்டணத்தை திருத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வருடத்தின் முதல் 6 மாதங்களுக்கான கட்டண திருத்தம் இன்றைய யோசனையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று வழங்கப்படவுள்ள யோசனை அடுத்த வருடம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இதேவேளை, இந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கியிருந்தது.
இரண்டு வார கால அவகாசம் தேவை
மின் கட்டணத்தை 6% குறைக்க முன்மொழியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, கொடுக்கப்பட்ட திட்டத்தில் மூன்று முக்கிய பிழைகளை சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்து முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு மின்சார சபையிடம் அறிவித்திருந்தது.
அதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவை என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மின்சார சபைக்கு நவம்பர் 8ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டதோடு, மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததன் காரணமாக நவம்பர் 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியதன் காரணமாக இன்று வரை கால அவகாசத்தை நீடிக்க ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், மின்சாரக் கட்டண திருத்த யோசனை இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்படாவிட்டால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.