Home இலங்கை அரசியல் மின்கட்டணம் தொடர்பில் ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மூடி மறைத்த அநுர அரசு : ஹர்ஷ எம்.பி

மின்கட்டணம் தொடர்பில் ஐ.எம்.எப்பின் நிபந்தனையை மூடி மறைத்த அநுர அரசு : ஹர்ஷ எம்.பி

0

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் மிக முக்கிய உண்மைகளை அரசாங்கம் மறைத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் (Colombo) நேற்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம்

இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், ”சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைக்கிறது.

தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அடுத்த கட்ட கடன் தொகை விரைவில் கிடைக்கப்பெறும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிதியை வழங்குவதாக நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனை தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறவில்லை.

ஜனாதிபதியின் வாக்குறுதி 

மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்று நாணய நிதியம் கூறியுள்ளதாக அரசாங்கம் வெளிப்படுத்தியதா? இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் இதை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் மறைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாணய நிதியத்துடன் பயணத்தை தொடர மாட்டோம் என்று பிரசாரங்களை முன்னெடுத்தார்.

நாணய நிதி திட்டங்கள் ஊடாக இலங்கை ஏதேனும் பயனடைந்துள்ளதா என்று கூட ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அது மாத்திரமின்றி மின்சாரக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைப்பதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர்கள் எரிபொருள் கொடுப்பனவை கொள்ளையடிப்பதாகவும், எரிபொருள் விலையை 50 அல்லது 100 ரூபாவால் குறைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மின் கட்டணத்தில் திருத்தம்

நாணய நிதியத்துடனான பயணத்தை தொடர மாட்டோம் என பொய் கூற வேண்டாம் என்று நான் அப்போது அவர்களிடம் கூறினேன், ஏனெனில் அவர்கள் நிச்சயம் நாணய நிதியத்துடன் பயணிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முற்றிலுமாக மாற்றுவதாக அரசாங்கம் கூறியது. கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தான போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நிதி நெருக்கடியைக் குறைக்க இலங்கை விரைவில் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்துக்கு இது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காரணிகள் தொடர்பில் அரசாங்கம் இன்று வரை வாய் திறக்கவில்லை“  என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version