எலான் மஸ்க்கின்(Elon Musk) ஸ்டார்லிங்குடனான ஆரம்ப ஒப்பந்த விடயத்தில்,ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலையை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வழங்குநர்களைப் போலல்லாமல், முக்கியமான
தரவுகளை அணுக அரசாங்கத்தின் இயலாமையைக் காரணம் காட்டி, இந்த கவலை
வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் இணைய சேவை
முன்னதாக கடந்த ஏப்ரலில் இலங்கையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த,
ஸ்டார்லிங்க் இணைய சேவையின் முன்னேற்றம் குறித்து நேற்று தொலைக்காட்சி
அரசியல் நிகழ்ச்சியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே
ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் அண்மைய நீதிமன்ற துப்பாக்கிச் சூடு
உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதில் தொலைத்தொடர்பு தரவுகளுக்கான அணுகல் முக்கிய
பங்கு வகித்துள்ளது.
எனினும், ஸ்டார்லிங்க் ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்திற்கு இதே போன்ற அணுகலை
வழங்கவில்லை.
தேசிய பாதுகாப்பு
ஸ்டார்லிங்கின் தரவு அமைப்பை அணுக இலங்கைக்கு அதிகாரம் இல்லை, மேலும் இதற்காக
உள்ளூர் இணைப்பாளர் ஒருவரும் இல்லையென்று அநுர குமார திசாநாயக்க
சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு தரவு அணுகல் இன்றியமையாதது என்று குறிப்பிட்டுள்ள
அநுர குமார, இந்தவிடயம் அசல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்
இந்த விடயம் தொடர்பில், தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயங்களை தேசிய
பாதுகாப்பு சபை பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்துள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார்லிங்குடன் விவாதிக்கப்பட்டது.
அவர்கள் ஒரு தரவுப்பலகையை( Dashboard) வழங்குவதாக உறுதியளித்தனர்
ஆனால் அது எந்த அளவிற்கு தரவு அணுகலை அனுமதிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை
என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
