தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesingh ) நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (20) இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவி விலகியதையடுத்து, நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதையடுத்து, அதற்கமைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது, ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முன்வந்தனர்.
வாக்கெடுப்பு
நாடாளுமன்றத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உட்பட 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியதோடு 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இதன்படி, செல்லுபடியாகும் 219 வாக்குகளில் 134 வாக்குகளைப் பெற்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தல்
அன்று முதல் இன்று வரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்து வருவதுடன், அன்றைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி கருதப்படுகிறார்.
எவ்வாறாயினும், தற்போது அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடு வந்துள்ள நிலையில், அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க நேரடியாக அறிவிக்காவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்.ரணில் விக்கிரமசிங்கவே என ஜனாதிபதி தரப்பு தெரிவித்து வருகிறது.