Home இலங்கை சமூகம் வெளிநாடு செல்ல தயாராகி வரும் கலால் திணைக்கள அதிகாரிகள்

வெளிநாடு செல்ல தயாராகி வரும் கலால் திணைக்கள அதிகாரிகள்

0

கலால் விதிகளுக்கு எதிராக அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் தூண்டுதலின் பேரில் மதுபான உரிமங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி உள்ளிட்ட சிலர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கலால் சட்டத்தின்படி வழங்கப்படக்கூடிய மதுபான உரிமங்களின் அளவைத் தாண்டி, பல்வேறு நபர்களுக்கு இரகசியமாக மதுபான உரிமங்களை வழங்கினார் என, மதுபான நிலைய உரிமையாளர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தது.

இந்நிலையில் அடுத்து, உரிமங்கள் வழங்குவதற்கு எதிரான இடைக்காலத் தடைடை நீதிமன்றம் விதித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இந்நிலையிலேயே நீதிமன்ற உத்தரவை மீறி மதுபான அனுமதிப்பத்திரத்தை தொடர்ந்தும் வழங்கிய திணைக்கள உயர் அதிகாரி ஒருவரே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக கலால் திணைக்கள தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த காலத்தில் புதிதாக 500 மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும், இதன்போது பல இலட்சம் ரூபா கையூட்டலாக பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த பல கலால் அதிகாரிகளுக்கும் மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு பாரிய அளவிலான மோசடியாக, போலி மதுபான ஸ்டிக்கர்களால் ஆண்டுக்கு கோடிக்கணக்கான வரிகளை அரசாங்கம் இழந்தமை வெளிப்படையாகியது.

நாடாளுமன்றத்தில் அப்போதைய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச வெளிப்படுத்திய தகவலின் படி, இந்த வரி இழப்பானது வருடத்திற்கு சுமார் 6000 கோடி ரூபா (60 பில்லியன் ரூபா) ஆகும்.

போலி ஸ்டிக்கர்

2023 ஆம் ஆண்டில் போலி ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி ஒரு நிறுவனம் மாத்திரம் வரி ஏய்ப்பு செய்திருப்பது 440 கோடி என்றும், போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு மதுபான போத்தல் ஒன்றில் இருந்து அரசுக்கு 1850ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றும் கலால் துறை மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், போலி ஸ்டிக்கர் கடத்தல் தொடர்பான விசாரணையும் தாமதம் அடைந்துள்ளதால், மிக விரைவில் வெளிநாடு செல்வதே இந்த அதிகாரியின் திட்டம் என குறித்த தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

NO COMMENTS

Exit mobile version