Home இலங்கை சமூகம் வடமாகாணத்தில் தோல்வியடையும் கோழி வளர்ப்பு : கவனிக்கப்படாதது ஏன்..!

வடமாகாணத்தில் தோல்வியடையும் கோழி வளர்ப்பு : கவனிக்கப்படாதது ஏன்..!

0

Courtesy: uky(ஊகி)

வடமாகாணத்தில் கோழி வளர்ப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சி ஒன்று அதிர்ச்சிகரமான முடிவுகளை தந்திருக்கிறது.

வெவ்வேறு பிரதேசங்களில் ஊர்க் கோழி முட்டை விற்பனையை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வடமாகாணத்தின் பல் தன்மைக்கேற்ப கிராமங்களை தெரிவு செய்து அங்கு ஊர்க் கோழி முட்டைகளை வர்த்தக நோக்கில் கொள்வனவு செய்தல் என்ற அடிப்படை அணுகுமுறையினை பின்பற்றி இந்த ஆய்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு ஊர்க்கோழி முட்டையின் நுகர்வும் பொதுமக்களிடையே மிகக் குறைந்தளவில் இருப்பதும் அவதானிக்கப்பட்டது.இது கவலைக்குரிய விடயமாகும்.

ஊர்க்கோழி முட்டை 

ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளுள் முட்டையும் பாலும் முதன்மையானவை.
நிறையுணவாக அமைந்துள்ள இவை மக்களால் தினமும் உட்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவுற்பத்தியை அதிகரிக்கும் தேவையும் எழுந்துள்ளது.இதற்காக முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அதிக முட்டையிடக் கூடிய கோழி இனங்கள் உருவாக்கப்பட்டன.

இத்தகைய வர்த்தக அணுகுமுறையினால் மக்களிடையே பாம் கோழி முட்டை மற்றும் ஊர்க்கோழி முட்டை என்ற இருவேறு முட்டை நுகர்வு தோன்ற ஆரம்பித்தது விட்டது.

சந்தையில் ஊர்க்கோழி முட்டைகளை விட பாம் கோழி முட்டைகளை (இறக்குமதி செய்யப்படும்) இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதனால் மக்களிடையே ஊர்க்கோழி முட்டை நுகர்விலும் பாம் கோழி முட்டைகளின் நுகர்வு அதிகரித்தது.

இப்போது அதிக போசணைப்பெறுமானம் கொண்ட முட்டையாக ஊர்க்கோழி முட்டையினை (தட்டுப்பாட்டுக்கு மத்தியில்) மக்கள் பயன்படுத்தி வருவதை அவதானிக்கலாம்.

பருவமடைந்த ஆரம்ப நாட்களில் பெண் பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான போசணைச்சத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக பாம் கோழி முட்டையிலும் ஊர்க்கோழி முட்டையினை அதிகளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாழ்வாதாரம்

தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக கோழி வளர்ப்புக்கான உதவிகள் கிராமசேவகர் ஊடாகச் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறே 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் பல தடவைகள் வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பும் கால்நடை வளர்ப்புக்குமான அடிப்படை உதவிகளை செய்திருப்பதனை அறிய முடிகின்றது.

உதவி கிடைத்த குடும்பங்களுக்கே மீண்டும் மீண்டும் உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதனையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

பெண் தலைமைத்துவக் குடும்பம் மற்றும் வறுமைக்கோட்டுக்குள் வாழும் குடும்பம் என்ற அடிப்படையில் வாழ்வாதார உதவிகளை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.எனினும் 2009இல் இருந்து இன்று வரை அவர்களது வறுமை இல்லாது போகவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முயற்சி இல்லை

வடக்கில் ஊர்க்கோழி முட்டையினை வர்த்தக நோக்கில் கொள்வனவு செய்து கொள்ளுமளவுக்கு உற்பத்தி இல்லை என்பது வெளிப்படையானது.

குறித்த ஒரு மாவட்டம் என்றில்லாது வடக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இதே நிலை இருப்பதும் அல்லது அடிக்கடி இந்த நிலை தோன்றிச் சென்றிருப்பதும் ஆய்வின் போது அறிய முடிகின்றது.

வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்ட கிராமங்களில் வழங்கப்பட்ட வாழ்வாதாரங்கள் தொடர்பாக கிராமசேவகர்களிடம் அறிவியல் பூர்வமாக வினவிக்கொள்ள முற்படும் போது அவர்களது ஒத்துழைப்பு பாராட்டும்படி இருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஊர்க்கோழிக்குச்சுகளை வழங்குவதோடு அவற்றை பராமரித்து வளர்ப்பதற்கான கோழிக்கூடுகளை அமைப்பதற்கும் உதவிகளை செய்த பின்னரும் பயனாளிகளால் அவற்றை சரிவர பராமரித்து பயன்பெற்றுக்கொள்ள முடியாததே இந்த தோல்விக்கு காரணம்.

ஆரம்ப உதவிகளை பெற்றுக்கொண்ட அவர்கள் அவற்றை பராமரித்து அதிலிருந்து வருமானத்தை பெற்றுக்கொள்வதோடு அந்த வருமானத்தின் அளவினைப் பெருக்கிக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதற்காக அவர்களிடம் உள்ள கோழிகளின் அளவினை பெருக்கிக் கொண்டு தொடர்ச்சியான உற்பத்திகளை பெற்று பயனடைவதற்காக கோழி வளர்ப்புத் தொடர்பில் தங்களின் அனுபவ அறிவினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறையும் கிடைக்கும் வாழ்வாதார முயற்சிகளையும் இப்போது தான் முதல் முறையாக அந்த உதவிகளை பெற்றுக்கொள்பவர்கள் போல் பயனாளிகள் நடந்து கொள்வதாக கிராமம் ஒன்றில் சுயதொழில் முயற்சியாளராக உள்ள கோழிப்பண்ணையாளர் இது தொடர்பில் தன் அவதானிப்பையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

ஆரோக்கியமான மாற்றம் 

வாழ்வாதார உதவிகளை காலத்துக்கு காலம் வழங்கிக்கொள்ளும் போக்கு மாற்றம் பெற வேண்டும்.

ஒரு பயனாளிக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் போது அது தொடர்பிலான அவரது முயற்சிகள் தொய்வடையாது தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதிலும் அதில் அவர் வெற்றிபெற்று அந்த தொழில் முயற்சியில் சிறந்த, தேர்ந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் வரை அவர் மீதான கண்காணிப்புக்களும் நெறிப்படுத்தல்களும் அவசியம் தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

அத்தோடு கிராமசேவகர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய வாழ்வாதார முயற்சிகள் பற்றிய தெறிவான அறிவும் இலக்கு நோக்கிய பயணத்தில் உறுதியான திட்டமிடலும் கிராம சேவகர்களிடம் இருக்க வேண்டும்.

ஏனெனில் பயனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் அரசாங்கங்கள் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

தொழில் வாய்ப்புக்கள்

ஆதலால் இது தொடர்பான சரியான திட்டமிடல் கிராமசேவகர்களிடமே இருத்தல் அவசியம்.அதற்கான உரிய அனுமதிகளை தங்கள் மேலதிகாரிகளிடம் பெற்று செயற்படுத்தும் திறமையானவர்களாகவும் கிராம சேவகர்கள் இருக்க வேண்டும்.

வாழ்வாதார உதவிகள் மூலம் உருவாக்கப்படும் தொழில் முயற்சிகள் மூலம் சமூகத்திற்கு தேவையான உற்பத்திகளை செய்து கொள்ள முடிந்தால் உள்ளூர் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும்.

அத்தோடு உள்ளூர் சமூகங்களிடையே தொழில் வாய்ப்புக்களும் பெருகி மக்களிடையே தலைவிரித்தாடும் வறுமையை இல்லாது செய்துகொள்ள வாய்ப்பேற்படும்.

ஊர்க்கோழி முட்டைகளை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும் போது அவற்றை ஏற்றுமதி நோக்கி நகர்த்திச்செல்ல முடியுமானால் முட்டை இறக்குமதி தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்த்து பொருளாதார மேம்பாட்டினை நாம் பெற்றுவிடலாம் என்பது வெளிப்படையே!

NO COMMENTS

Exit mobile version