முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலைய பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன் குளம்
நீர்ப்பாசனக்குளத்தின் கீழுள்ள களமோட்டை வயல்பகுதிக்கு ஆற்றைக்
கடந்துசெல்வதற்கு பாலம் இன்மையால் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு
முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்jநிலையில் அந்த பகுதி விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரனுக்கு இதுதொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து, நாடாளுமன்ற
உறுப்பினர் குறித்த பகுதிக்கு இன்றையதினம் நேரடியாகச் சென்று நிலமைகளைப்
பார்வையிட்டார்.
அத்துடன், குறித்த பாலத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம்
செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆற்றுப்பாலம் இன்மை
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலைய பிரிவிலுள்ள மதவளசிங்கன் குளத்தின்
கீழுள்ள களமோட்டை பகுதி வயல்நிலங்களுக்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கான பாலம்
இன்மையால் விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
களமோட்டைப்பகுதியில் 220ஏக்கர் வயல்நிலங்களில் பெரும்போகம் மற்றும் சிறுபோக
நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த களமோட்டை வயல்பகுதிக்கு செல்லும் வழியின் குறுக்கே உள்ள
ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலமொன்று இன்மையால் நெற்பயிற்செய்கைக் காலத்தில்
நிலப்பண்படுத்தலுக்கு உழவியந்திரத்தை கொண்டுசெல்லுதல், விவசாய உள்ளீடுகளை
எடுத்துச்செல்லுதல், விவசாய நிலங்களுக்கான காவலுக்குச் செல்லுதல்,
அறுவடைக்காலத்தில் அறுவடை இயந்திரத்தைக் கொண்டுசெல்வது, அறுவடையை
எடுத்துச்செல்வது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் விவசாயிகள் பலத்த
இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் அவதி
அதேவேளை சில சந்தர்ப்பங்களில் 35அடி தூரமான ஆற்றைக் கடப்பதற்குப் பதிலாக
15கிலோமீற்றர் சுற்றியே தமது விவசாய நிலங்களுக்கு செல்லவேண்டிய அவலநிலையை
களமோட்டைப் பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள்
எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கமைய நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்ட
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த ஆற்றுப்பாலத்தை
அமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம்செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த களவிஜத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம்
தயாரூபன், மதவளசிங்கன்குளம் கமக்கார்அமைப்பின் பிரதிநிதிகள்,
களமோட்டைப்பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும் இணைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
