2025 ஆம் ஆண்டு சிறுபோகத்திலும் நல்ல அறுவடை கிடைக்குமென நம்புகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இதேவேளை நான் ஜனாதிபதியான பின்னரான எல்லா போகத்திலும் அறுவடை கிடைத்தது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அக்கரைப்பற்றில் (Akkaraipattu) நேற்று (23) இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நான் நாட்டைப் பொறுப்பேற்ற போது, எரிவாயு, அரிசி, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்கவில்லை.
பெரும்போகத்திற்கும் சிறுபோகத்திற்கும் உரமின்றி விவசாயிகள் வீதியில் இறங்கினர். மக்களின் பசியை போக்க வேண்டியிருந்தது.
மக்கள் பசி எனக்கு புரிந்தது. இளையோரின் எதிர்பார்ப்புக்களும் புரிந்தது. அதனால் நாட்டையும் நாட்டின் முன்பிருந்த சவால்களையும் துணிந்து ஏற்றுக்கொண்டேன்.
தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்தோம்
எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்தோம். மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்தனர்.
இதன்போது ஐ.எம்.எப் (IMF) எமக்கு உதவியது. அவர்களின் வேலைத் திட்டத்தின் கீழ் இலக்கை நோக்கிய பயணம் இருந்தது.
எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம். அன்றைய நிலையை விட இன்று நல்ல நிலைமை உருவாகியுள்ளது” என தெரிவித்தார்.