அநுர அரசு சமஷ்டியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது
பிரிவினைவாதம் அல்ல என்ற உண்மையைச் சிங்கள மக்களிடம் கூறும் வரையில் இனப்
பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்த அரசின் மீது நம்பிக்கை வைக்க முடியாது என மிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(22) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு,
கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள்
பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் தலைமத்துவம்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “இலங்கைத் தமிழரசுக் கட்சியானது 1949ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட நாளில்
இருந்து சமஷ்டி என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வரும் கட்சியாகும்.
ஆனால், இந்தப்
பிரேரணையில் தமிழரின் இனப்பிரச்சினக்கான தீர்வு தொடர்பான சமஷ்டி என்ற கருத்து
வலியுறுத்தப்படவில்லை.
அண்மைக்காலமாகத் தமிழரசுக் கட்சியின் தலைமத்துவத்தின் செயற்பாடுகள் அந்த
நிலைப்பாட்டில் இருந்து விலகியுள்ளதாகவே எங்களின் குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், நாடாளுமன்ற உறுபபினர் சிறீதரன் அவ்வாறான குற்றச்சாட்டைக்
குறிப்பிடக்கூடியவர் அல்லர். எனினும், இந்தப் பிரேரணையானது அந்தக் கொள்கையைத்
தவிர்த்திருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.
கடந்த தேர்தலில் சமஷ்டிக்கும் மற்றும் பொறுப்புக்கூறலில் சர்வதேச
விசாரணைக்குமாகவே ஆணையைப் பெற்றது. ஆனால், சர்வதேச விசாரணையும் இந்தப்
பிரேரணையில் தவிர்க்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது.
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்
என்று அரசு கூறுகின்றது. ஆனால், கடந்த வாரத்தில் குமணன் என்ற ஊடகவியலாளர்
அழைக்கப்பட்டு அவரிடம் 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இராணுவம் கொலைகளைச் செய்கின்றது. இந்த அரசிலேயே இது நடக்கின்றது. இந்த அரசு
அந்த மனோநிலையில் இல்லை என்று கூறினாலும் அது நடப்பதற்கான காரணங்கள் உள்ளன.
அந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்த அரசு நேர்மையாகச் செயற்படத் தயாராக
இருந்தாலும் இந்த அரசு நிரந்தரமாக இங்கிருக்கப் போவதில்லை.
ஜனநாயகத்தைக்
கடைபிடிக்கும் அரசாக இருந்தால் அரசு மாறும். இருந்தவர்கள் இனவாதிகள் என்று
இவர்களே கூறுகின்றனர்.
கடந்த 76 வருடங்களுக்கு மேலாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு
எப்படிக் கிடைக்கும். ஜே.வி.பி. அல்லது என்.பி. பியை நிரந்தரமாக ஆட்சியில்
வைப்பதன் ஊடாக மட்டுமே அதனைச் செய்யலாம்.
தமிழர்கள் கூறும் சமஷ்டி
இவ்வளவு காலங்களிலும் இனவாதிகள் என்று நீங்களே குறிப்பிடுபவர்கள் கடந்த
காலங்களில் செய்தவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துவதில் சிங்கள மக்கள்
உள்ளனர்.
இதனால் உங்களுக்கு ஒரு கடமை உள்ளது. அதாவது தமிழ் மக்கள் கூறும் சமஷ்டி
பிரிவினைவாதம் அல்ல என்ற உண்மையை சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
நீங்கள் சமஷ்டியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி
பிரிவினைவாதம் அல்ல என்ற உண்மையைச் சிங்கள மக்களிடம் நீங்கள் கூற வேண்டும்.
அந்த விவாதத்தை வெளிப்படையாக நடத்தலாம் என்று நீங்கள் கூறலாம். 76 வருடங்களாக
சிங்கள மக்களுக்குக் கூறிய பொய்களை இன்றும் நீங்கள் திருத்தாமல்
இருக்கின்றீர்கள்.
ஒற்றையாட்சிதான் விருப்பம் என்று
நீங்கள் கூறினாலும் தமிழர்கள் கூறும் சமஷ்டி பிரிவினை இல்லை. உலகத்தில்
முன்னேறியுள்ள நாடுகள் கடைப்பிடிக்கின்ற கொள்கையே சமஷ்டி. அதனையும் நாங்கள்
விவாதிக்கலாம் – பேசலாம் என்ற உண்மையைக் கூறுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
