தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் ஆழமான காற்றழுத்தம் இன்று (28)அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலைக்கு(trincomale) வடகிழக்கு பகுதியில் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
குறித்த நிலை இலங்கையின்(sri lanka) கிழக்கு கரையை அண்மித்த வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து இன்று மேலும் வலுவடைந்து சூறாவளியாக(cyclone) மாறுவதற்கு இடமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு,திருகோணமலையில் அதிகரிக்கும் மழை
இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டம் அதிகரித்திருப்பதுடன் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அதிகரித்த மழைவீழ்ச்சி மற்றும் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்போகும் காற்றின் வேகம்
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும். வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.