விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உர மூடைகளை 5,000 ரூபாவுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நேற்று (08) வெலிமடை (Welimada) நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வெலிமடை பகுதியிலுள்ள கிழங்குச் செய்கையாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ரணில் – அநுர உறவு
உர மானியம் வழங்கி, நாட்டின் மொத்த கேள்வியை பூர்த்தி செய்யும் அளவுக்கு விவசாயிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதிக்கு கிழங்கு செய்கையாளர்களின் நாடி துடிப்பு தெரியாது. எனினும், அவர் அநுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்துள்ளார்.
உள்நாட்டில் கிழங்குகளை அறுவடை செய்யும்போது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் மீது வரிச்சுமை
மேலும், பசுமைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்படுவதுடன் 50 கிலோ கிராம் உர மூடைகளை 5,000 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரணில் (Ranil Wickremesinghe) மற்றும் அநுரவினால் இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியாது. அவர்களால் செல்வந்தர்களின் கடன்களை தள்ளுபடி செய்து, சாதாரண மக்கள் மீது வரிச்சுமைகளை சுமத்த மட்டுமே முடியும்.
எனவே, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) ஒவ்வொரு விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான விசேட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.