Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் : வெளியான அறிவிப்பு

அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் : வெளியான அறிவிப்பு

0

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் அடுத்த பத்து நாட்களில் எமக்கு கிடைக்கவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க (Rml Ratnayake) தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் (Presidential election) தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அதிபர் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission) அதிகாரம் உள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

வாக்களிப்பு நிலையங்களை அமைத்தல்

இவ்வாறான நிலையில் அடுத்த பத்து நாட்களில் அதாவது ஜூலை 17ஆம் திகதி முதல் அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது.

இவ்வாறான நிலையில் அதிபர் தேர்தலுக்காக 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் முழுமையடைந்துள்ள அடுத்துவரும் சில நாட்களில் மாவட்ட ரீதியில் அவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதேநேரம் நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேவையான மேலதிக நடவடிக்கைகள், தேர்தல்கள் கண்காணிப்பு தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசாரம் 

தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், காவல்துறைமா அதிபர், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றுக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுத்துள்ளோம்.

மேலும், இம்முறை பிரசார செலவீனங்கள் சம்பந்தமாகவும் அதீதமான கவனத்தை நாம் செலுத்தவுள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

இதேநேரம், அதிபரின் பதவிக்காலம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பிலும் நாம் கரிசனை செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version