Home இலங்கை சமூகம் வெற்றிலைக்கேணி கடலில் அதிகாலை பரபரப்பு: மூன்றாவது நாளாக தொடரும் மோதல்!

வெற்றிலைக்கேணி கடலில் அதிகாலை பரபரப்பு: மூன்றாவது நாளாக தொடரும் மோதல்!

0

உழவு இயந்திரம் மூலம் 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட
மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர்
நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில்
புரிவதாக மற்றைய கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இதனால் ஏனைய கடற்றொழிலாளர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன்
அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை
முதலாளி கேவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய கடற்றொழிலாளர்கள் தொழில்
புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். 

சட்டவிரோத நடவடிக்கை  

குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு
தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது. 

ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து
வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னரே வெற்றிலைக்கேணி
விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருவதாக கூறப்படுகின்றது. 

மேலும், அதிகாலை 06.00 மணிக்கு பிறகே கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் இவர்கள்
சட்டத்திற்கு முரனாக நேர காலத்தை மீறி ஏனைய கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்திவருகின்றனர்.

இதனால் பாதிப்படைந்த கடற்றொழிலாளர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது
நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கடற்தொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள
அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்க தவறுவதால்
முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதால் மருதங்கேணி பொலிஸ்
நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version