அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மஹாவலி ஆற்றை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மஹாவலி ஆற்றின் சில வடிநிலப் பகுதிகளில் நேற்று (17) இரவு முதல் பெய்து வரும் மழை மற்றும் மஹாவலி ஆற்றுப்படுகையின் மேல்மட்ட நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் காரணமாகவே இந்த வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களம் கோரிக்கை
இதனடிப்படையில் கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் கல்லேல்ல பகுதி, சோமாவதி ரஜமஹா விகாரைக்கான பிரவேச வீதி மற்றும் சோமாவதி ரஜமஹா விகாரையைச் சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் சில நாட்களுக்கு சோமாவதி ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பக்தர்களும், அந்தப் பகுதிகளில் மஹாவலி ஆற்றிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் மற்றும் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
