அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில்
வரலாறு காணாத பெருவெள்ளத்தால் பரீட்சை கடமைகளிலும் பெரும் சிரமம்
ஏற்பட்டுள்ளதுடன் பரீட்சை எழுதும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதனை
அவதானிக்க முடிந்தது.
மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளனர்.
பலத்த மழை வெள்ளம் காரணமாக இன்று (26) கிட்டங்கி பாலம் சுமார் o8 அடிக்கு மேல்
நீர் பாய்ந்து செல்வதனால், நாவிதன்வெளி அன்னமலை மகா வித்யாலயத்துக்கு உயர்தர
பரீட்சை கடமைகளுக்காக சென்ற மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள்,
மேலதிக உதவி மேற்பார்வையாளர்கள் மற்றும் நோக்குனர்கள் உள்ளிட்ட குழுவினரை
கல்முனை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திலிருந்து கொண்டு செல்வதற்காக கல்முனை
இராணுவ படையினர் வாகனம் மூலம் ஏற்றிச் சென்றுள்ளனர்.
பரீட்சைகள் இடைநிறுத்தம்
இதேவேளை, பரீட்சை முடிந்த
வேளையில் கடற்படையினரின் உதவியுடன் பரீட்சை விடைத்தாள்கள் மற்றும் பரீட்சை
கடமைகளில் ஈடுபட்ட அனைவரையும் கிட்டங்கி பாலத்தின் ஊடாக கடற்படையினர் படகு
மூலம் கொண்டு சென்றனர்.
இதேவேளை, நேற்று (26) மாலை பரீட்சைத் திணைக்களத்தின் தீர்மானத்தின்படி உயர்தரப்
பரீட்சைகள் தற்காலிகமாக நவம்பர் 27,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தற்காலிகமாக
இடைநிறுத்தப்படுவதாகவும் குறித்த நாள் பரீட்சைகள் டிசம்பர் 21,22 மற்றும் 23
ஆம் திகதி களில் நடைபெறும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
மக்களின் இயல்பு நிலை
நேற்று (25) இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக
மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின்
இயல்பு நிலையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலர் சொந்த இடங்களிலிருந்து இடம்
பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.