வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காட்டு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த
மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்று மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு கொண்ட ரிவோல்வர்
ஒன்று உட்பட இரு கை துப்பாக்கிகளை கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவு மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து
பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணியுமான பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின்
கீழ் மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் உட்பட்ட குழுவினர் சம்பவ தினமான நேற்று(08) மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி காட்டுப்பகுதியில் சோதனை
நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிகள் நல்ல செயல்பாட்டு நிலையில்
இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்கிரோ ரக கைதுப்பாகி
ஒன்று அதன் ரவை 4உம் இத்தாலி தயாரிப்பான ரிவோல்வர் கைதுப்பாக்கி ஒன்றையும்
மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இதனை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான
நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் நல்ல செயல்பாட்டு நிலையில்
இருந்துள்ளடன் இந்த ஆயுதங்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் குறித்த இடத்தில்
மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
