ஊழல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (01) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூபா 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை, முறைகேடான வழியில் தமது ஆதரவாளர்களுக்கு விநியோகித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன , கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
வெளிநாட்டுப் பயணத் தடை
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்துள்ளது.
அத்துடன் எஸ்.எம். சந்திரசேனவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கின் மேலதிக விசாரணகளை எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் ஜனவரி 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
