நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் (anura kumara dissanayake)அவர் தலைமையிலான அரசாங்கமும் வெற்றியீட்டக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க(dissanayake)s.b நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அநுரகுமார திஸாநாயக்கவின் நடத்தை மற்றும் அவரது அறிக்கைகளின் அடிப்படையில், மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பலம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்று திஸாநாயக்க கூறினார்.
ஏனைய கட்சிகளுக்கு கடினமாகப்போகும் தேர்தல் வெற்றி
தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என தாம் நம்புவதாகத் தெரிவித்த திஸாநாயக்க, பொதுத் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு தேர்தல் வெற்றி கடினமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
“அது சுலபமாக இருக்காது. தற்போதுள்ள எம்.பி.க்களில் இருந்து சிறிய அமைச்சரவையை நியமித்து, அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வெற்றிகரமான ஜனாதிபதி எமக்கு இருக்கிறார்” என அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கவுள்ள வாக்குகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) குறைந்தது 6.5 மில்லியன் வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளார்.
“தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி இப்போது அந்த நன்மையைப் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், தேர்தலுக்கு பலமான எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்தால் அது சிறந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.