Courtesy: Sivaa Mayuri
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாளை (22.11.2024) குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ரமேஸ் பத்திரன, ரொஷான் ரணசிங்க மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலங்களை வழங்கினர்.
தரக்குறைவான இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியமை குறித்தே இந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கை
முன்னதாக, கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 அமைச்சர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும் என்று 2024 நவம்பர் 11ஆம் திகதி, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 182 வகையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை பத்திரத்தை, கெஹலிய ரம்புக்வெல்ல அனுப்பி வைத்த போது அமைச்சரவையில் மேலும் 18 பேர் இருந்ததாக பிரதி மன்றாடியார் நாயகம் மன்றில் தெரிவித்தமையை அடுத்தே, அந்த 18 பேரிடம் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுமார் 07 மாதங்களின் பின்னர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.