இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) விளக்கமளித்தார்.
காவல்துறை அதிகாரிகள்
இதன்படி இன்று முதல் காவல்துறை அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதிக செலவு காரணமாக
முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.