Home முக்கியச் செய்திகள் வங்கியில் இலட்சக் கணக்கில் மோசடி : கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

வங்கியில் இலட்சக் கணக்கில் மோசடி : கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

0

இலங்கையின் மக்கள் வங்கியில் (People’s Bank) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் நிலையான வைப்புகளில் (Fixed Deposit) பாரியளவில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மக்கள் வங்கியின் பிரதான கிளையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) நீதிமன்றத்திற்கு நேற்று (12) அறிவித்தது.

சந்தேக நபர் கைது

குறித்த முறைப்பாட்டிற்கமைய, வங்கியின் புறக்கோட்டை (Pettah) கிளையின் கடன் அதிகாரியான பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சத்துபமா தர்ஷனி ரத்நாயக்க என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட (Nugegoda) நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

63 இலட்சம் ரூபா மோசடி

சந்தேகநபர் வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் நிலையான வைப்பு கணக்கில் 63 இலட்சம் ரூபாவை தனது கணவரின் தாய் மற்றும் நெருங்கிய உறவினர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பில் வங்கியின் பிரதான கிளையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version