கப்பல்துறை நிறுவனமான கொழும்பு டொக்கியாட்டின் பங்குகளை வெளிநாட்டு
நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை
எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவின் கப்பல் கட்டுமான தயாரிப்பு
நிறுவனமான, மசகான் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை இரத்து
செய்யக் கோரி உயர்நீதிமன்றில், மனு தாக்கல் செய்யப்போவதாக, முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகோட எச்சரித்துள்ளார்.
கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தின் 51வீதப்பங்குகளை இந்த இந்திய நிறுவனத்திற்கு
விற்பனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மை உரிமை
இதன் மூலம் இலங்கை அரசு, டொக்கியாட்டின் பெரும்பான்மை உரிமையை இழக்க
வழிவகுக்கும் என்று ஜெயகோட தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் சொத்துக்கள் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல்
மதிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பங்குகள், வெறும் 50 மில்லியன் அமெரிக்க
டொலர்களுக்கு விற்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள, பிரதி அமைச்சர் எரங்க
குணசேகர, குறித்த பரிவர்த்தனை வெளிப்படையாக கையாளப்படும் என்று
உறுதியளித்துள்ளார்.
