Home முக்கியச் செய்திகள் போர்க்காலத்தில் இராணுவ நெருக்கடிகள் கடந்து மக்களுக்கு உணவு கொண்டுவந்த அரச அதிபர்…

போர்க்காலத்தில் இராணுவ நெருக்கடிகள் கடந்து மக்களுக்கு உணவு கொண்டுவந்த அரச அதிபர்…

0

Courtesy: தீபச்செல்வன்

மிகவும் கடுமையான போர்ச் சூழலைக் கொண்ட வருடம் 1996. யாழ்ப்பாணத்தில் இருந்தும் மக்கள் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த காலமது. வவுனியாவில் இருந்து உணவு லொறிகளை அரசு அனுப்பாமல் இருந்தது.

கிளிநொச்சியில் இருந்து வவுனியா சென்று உணவு வாகனத் தொடரணியைக் கொண்டுவர அதிகாரிகள் மரணபயத்தினால் மறுத்தார்கள். இந்தநிலையில் அப்போது மேலதிக அரசாங்க அதிபராக இருந்த தி. இராசநாயகம் கிளிநொச்சியிலிருந்து 25 லொறிகளைக் கொண்டு சென்று மக்களுக்காக உணவுப்பொருட்களை எடுத்து வரும் முயற்சியில் இறங்கினார்.

இதற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் லொறி ஒன்றில் பற்றி வைக்கப்பட்டு பொருட்களை கொண்டு செல்ல முடியாது தடையை ஏற்படுத்த முயற்சித்த போதும் அதற்கு எதிராக துணிந்து வாதாடி கிளிநொச்சிக்கு உணவுப் பொருட்களை நிரப்பிய வாகனத் தொடரணியைக் கொண்டு வந்து சேர்த்தார் முன்னாள் அரச அதிபர் இராசநாயகம்.

அரச அதிபராக இருந்த இராசநாயகம்

போரும் இடம்பெயர்வுகளும் மரணமும் சூழ்ந்த காலத்தில் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகவும் பின்னர் அரச அதிபராகவும் பணியாற்றிய இராசநாயகம் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் கலை, கல்வி, சமூக, சமய மேம்பாட்டிற்காகப் பணியாற்றியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர், அப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த திருநாவுக்கரசு – பாக்கியம் தம்பதிகளின் மகனாக 02.05.1946ஆம் ஆண்டில் பிறந்தார்.

பூநகரி அத்தாய் சிறிமுத்துக்குமாரசுவாமி பாடலையில் ஆரம்பக் கல்வியையும் பின்னர் பூநகரி மகாவித்தியாலத்தில் இடைநிலைக்கல்வியையும் யாழ் இந்துக்கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றுள்ளார்.

பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய கலைப்பட்டதாரி ஆவார். கணக்காய்வாளராகப் பணி தொடங்கிய இவர் பல பதவிகளை வகித்தார்.

திட்டமிடல் உதவிப்பணிப்பாளராகவும் பணியாற்றியதுடன் சிவில் நிர்வாகப் பணிசார்ந்து அமைச்சுக்களிலும் பணியாற்றினார்.

ஒருமுறை வன்னிக்கு வவுனியாவில் இருந்து உணவை எடுத்து வரும் பணியில் அரச அதிபராக இருந்த இராசநாயகம் ஈடுபட்டுள்ளார்.

மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தார்

இதன்போது ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து வழிமறித்த இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்காக இந்த உணவை எடுத்துச் செல்கிறீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

வன்னியில் பிரபாகரன் மாத்திரமல்ல, அவரது தாய் தந்தையரும் வேறு பல பிள்ளைகளும் மக்களும் உள்ளனர். ஒரு அரச அதிபர் என்ற வகையில் அவர்களுக்கு உணவு கொடுப்பது எனது கடமை என்று கூறியபோது அந்த இராணுவ அதிகாரிகள் வாயை மூடிக் கொண்டு வழிவிட்டதாக அந்நாட்களில் பேசப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசு வலுப்பெற்ற காலத்தில், இவரே கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

கிளிநொச்சியில் எந்த இடத்தில் என்ன பணியை செய்ய வேண்டும், எந்த இடத்தில் என்ன வளம் இருக்கிறது? எந்த இடத்தில் என்ன திட்டத்தை செய்ய வேண்டும் என அறிந்தவர் இராசநாயகம் ஐயா என விடுதலைப் புலிகள் தரப்பு அறிந்திருந்தது.

1996இல் படைகளிடம் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த நிலையில் மீண்டும் 1998இல் விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றினர். அதன் பிறகு ஐந்து இலட்சம் மக்களை மீளக்குடியமரத்த விடுதலைப் புலிகள் தீர்மானித்த வேளையில் அந்த மீள்குடியேற்றத்தை ஒரு அரச அதிபராக சிறப்பான வகையில் முன்னெடுத்தார்.

மக்களுக்கு ஆற்றிய உயரிய பணிகள்

பல நாட்களுக்கு மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி, மீளக்குடியேறும் மக்களுக்கான தேவைகள், நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் எடுத்தார்.

கிளிநொச்சியில் விவசாயபீடம், பொறியில்பீடம் அமைக்க பங்களிப்பு செய்த இவர், அழகியல் கலாமன்றம், யோகர்சுவாமி முதியோர் இல்லம் முதலானவற்றையும் அமைத்தார்.

பிரதிப் பிரதம செயலாளராக பணியாற்றிய இவர், தன் ஓய்வுக்காலத்தில் போரால் பாதிக்கப்பட்ட மகாதேவ ஆச்சிரமத்தை மீளப்புனரமைப்பதில் அரும்பாடுபட்டார்.

தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் மகாதேவ ஆச்சிரமத்தின் குழந்தைகளுக்காக வாழ்ந்து தொண்டுபுரிந்த நிலையில் 2018ஆம் ஆண்டு நவம்பர் 02ஆம் நாளன்று இவ்வுலகைவிட்டு நீங்கினார்.

எனினும் திரு. தி. இராசநாயகம் அவர்கள், சைவம், தமிழ், சமூகம், நிர்வாகம், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வு என பன்முகப்பட்ட தளத்தில் மக்களுக்கு ஆற்றிய உயரிய பணிகள் வாயிலாக ஈழ மண்ணில் என்றும் நினைவுகொள்ளப்படுவார்.

NO COMMENTS

Exit mobile version