தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் தமிழ்த் தேசிய பேரவை அணுக
திட்டமிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பேரவையினர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை நேற்று (15.11.2025) யாழ்ப்பாணத்தில் சந்தித்து
கலந்துரையாடினார்.
இதனையடுத்து, சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
“இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா பலமாக உள்ளது.
இந்தியாவுடன் இணைந்து போகாமல்
இலங்கையின் மிக மோசமாகியுள்ள பொருளாதாரத்தை மீள உயர்த்த முடியாத நிலை உள்ளது.
உறுதியான நிலைப்பாடு
இது இந்திய மத்திய அரசின் பேரம் பேசலுக்கான சக்தியை அதிகரித்துள்ளது. அதனை
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் தொல்
திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவுபடுத்தினோம்.
அவர் தமிழக ஆட்சியில் முக்கிய பங்காளி. ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பாக திமுக
ஆட்சியில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பேசினோம்.
ஈழத்தமிழர் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை
தமிழக அரசு எடுக்க வலியுறுத்துவதற்கு தொல் திருமாவளவன் அத்தியாவசியம்” எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மர நடுகை விழாவில் தொல்.திருமாவளவன் நேற்றையதினம் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
