Home இலங்கை அரசியல் ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டியைக் கொண்டுவர முடியுமா..! ஜனாதிபதியிடம் கஜேந்திரன் கேள்விக்கணை

ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டியைக் கொண்டுவர முடியுமா..! ஜனாதிபதியிடம் கஜேந்திரன் கேள்விக்கணை

0

இலங்கையில் ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (18) செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமஷ்டி அரசமைப்பு

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி, நாடாளுமன்றம் வந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பல முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறி வருகின்ற நிலையிலே இந்த நாட்டைப் பொருளாதார அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்குச் செய்யப்பட வேண்டிய மிகப் பிரதானமான ஒரு கடமை இருக்கின்றது என்பதை நான் ஜனாதிபதியின் மேலான கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

75 வருடங்களாக இனங்களுக்கிடையிலே இருந்த உறவைச் சீர்குலைத்து துருவமயப்படுத்தப்பட்டுள்ள ஒற்றையாட்சி முறைமையான அரசமைப்பு, இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்துள்ள ஒற்றையாட்சி முறைமையான அரசமைப்பு, இந்த நாட்டினுடைய உயர் நீதிமன்றம் உட்பட சகல நீதிமன்றங்களையும் முடமாக்கியிருக்கின்ற ஒற்றையாட்சி முறைமையான அரசமைப்பு ஒழிக்கப்பட்டு சகல இனங்களும், தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்கக்கூடிய ஒரு சமஷ்டி அரசமைப்பு கொண்டு வரப்படுவதன் மூலம் மட்டும்தான் அந்த முன்னேற்றத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முடியும்.

அவ்வாறான முயற்சியை செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னுடைய காலத்தில் இந்த ஒற்றையாட்சி முறைமையின் தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் வல்லரசுத் தரத்துக்கு இந்தத் தேசத்தைக் கொண்டு வருவதற்கான பங்களிப்பைச் செய்ய சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனைச் செய்ய ஜனாதிபதி தயாராக இருக்கின்றாரா என நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version