Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை சூழவுள்ள இடங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை சூழவுள்ள இடங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

Courtesy: uky(ஊகி)

 முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினை சூழவுள்ள இடங்களில் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன.

மாவட்டத்தின் தலைமைச்செயலகமாக இருக்கும் இதனைச் சூழவுள்ள இடங்கள் தூய்மையாகவும் அழகாகவும் பேணப்படுவதில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

மாவட்டச் செயலக கட்டடத் தொகுதியின் வாசல் பகுதி தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அளவுக்கு அதன் பின் பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களில் பேண முயற்சிக்கப்படவில்லை.

மாவட்டச் செயலகத்தின் உட்பகுதிகளில் உள்ள தூய்மையாக்கலில் காட்டப்படும் அளவுக்கு மக்கள் நடமாடும் வெளிப்பகுதிகளின் தூய்மை மற்றும் அழகுபடுத்தலில் கவனமெடுக்கப்படுவதில்லை என்பதை அவதானிப்புக்கள் மூலம் உறுதி செய்ய முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

வீசப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் 

முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முல்லைத்தீவு நகரின் சுற்றுவட்டப் பாதையின் அருகில் அமைந்துள்ளது.

ஒல்லாந்துக் கோட்டை கட்டப்பட்டிருந்த இடத்தில் இப்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் அமைந்துள்ளது.

முன்பக்கமாக விளையாட்டு மைதானமும் பிரதான வீதியும் இருக்கின்றது.மற்றொரு பகுதியில் சுற்றுவட்டப்பாதை, மாங்குளம் முல்லைத்தீவு வீதி அமைந்துள்ளது.
மாவட்டச் செயலகத்தின் பிற்பகுதியில் இராணுவத்தினரால் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபி ஒன்றும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவட்டச் செயலகத்தின் வெளிப்புறமாக அதன் சுற்றுச்சூழலில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சுற்று வட்டப்பாதையுடன் இணையும் மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மாவட்டச்செயலகத்தின் பக்கமாக பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சிதறி கிடக்கின்றன.இவை அச்சூழலின் காட்சித்தோற்றத்தை பொருத்தமற்றதாக மாற்றிவிடுகின்றதை சமூக ஆர்வலர்கள் பலரும் விசனத்துடன் சுட்டிக்காட்டுகிறனர்.

நிழலைப் பெற நாட்டிய மரக்கன்றுகளை சுற்றி அமைக்கப்பட்ட கூடுகளினுள்ளும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் வீதியில் ஓரமாக உள்ள வடிகால்களினுள்ளுமாக காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் வெற்றுப் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகள் சிதறியுள்ளன.

இத்தகைய சூழலை இல்லாது செய்து மாவட்டச் செயலகத்தின் வெளிச்சுற்றாடலை தூய்மையாக பேணிக் கொள்வதில் கூடிய கவனம் எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மாவட்டச் செயலகத்திற்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

முன் வாசல்கள்

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முகப்புப் பகுதியில் இரண்டு வாசல்கள் உள்ளன.

ஒன்று உள் நுழைவதற்கான வாசலாகவும் மற்றையது வெளியேறுவதற்கான வாசலாகவும அமைந்துள்ளது.

இரு வாசல்களிலும் அவற்றோடு இணைந்த பாதைகளிலும் காட்சித் தோற்றம் பாராட்டும் படியாக இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

தூய்மையாகவும் அழகாகவும் பேணி வருவதனை அவதானிக்க முடிகின்றது.ஆயினும் வெளியேறும் வாசலின் இடது பக்கமாக உள்ள பகுதிகளில் மாவட்டச் செயலகத்தின் சுற்று மதிலுக்கு அருகாக குப்பைகள் குவிக்கப்படுவதோடு அவை அவ்விடத்திலேயே அடிக்கடி தீயூட்டப்படுவதையும் அவதானிக்கலாம்.

சுற்றுமதிலுக்கு வெளிப்புறமாக உள்ள பகுதிகள் பிரதான வீதிகளை தங்கள் ஒரு பக்கமாக பகிர்ந்து கொள்கின்றன.

பிரதான வீதிக்கும் சுற்றுமதிலுக்கும் இடையில் உள்ள பகுதியினை அழகுநயப்பட நிலத்தை சீரமைத்து, புற்களை வளர்த்து, ஈரப்படுத்தி, அழகிய தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொண்டால்; முல்லைத்தீவு நகரமும் அதன் தலைமை அலுவலகமும் பொலிவு பெறும் என எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கவிஞர் நதுநசி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

முன்மாதிரியான செயற்பாட்டு வெளிப்பாடுகளை அரச அலுவலகங்கள் வெளிக்காட்டியவாறு இருத்தல் அவசியம்.

சுற்றுச்சூழலை சூழல்நேயத்தோடு அழகூட்டி காட்சிப்படுத்துவதால் முல்லைத்தீவு நகருக்கு வந்து செல்லும் மக்கள் ஆரோக்கியமான உளச்சுகாதாரத்தினை பெற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுவட்டச் சந்தி 

முல்லைத்தீவு நகரின் மத்தியில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் மிக அருகில் மாவட்டச் செயலகம் அமைந்துள்ளது.

சுற்றுவட்டப் பாதையின் சூழலை அழகுற சீராக பராமரிக்கப்படுதலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வீதிகளையும் குறிப்பிட்டளவு தூரம் வரை நேர்த்தியாகவும் தூய்மையாகவும் பேணிக்கொள்ளும் போது சிறந்த அழகியல் கட்டமைப்போடு முல்லைத்தீவு நகரம் மாற்றம் பெற்றுவிடும்.

ஆயினும் மாவட்டச் செயலகத்தினரின் சிந்தனைக்கு இத்தகைய எண்ணக்கருக்கள் இதுவரை தோற்றம் பெற வில்லைப்போலும்.

வளவுக்குள் இருக்கும் குப்பைகளை வீதியில் கொட்டிவிட்டு அது எப்படி வேண்டுமானாலும் சிதறிக்கிடந்து சூழலை எப்படி வேண்டுமானாலும் அலங்கோலமாக்கட்டும் என கண்டும் காணாமல் இருக்கும் அரச உத்தியோகத்தர்கள் பணியாற்றும் இடம் என்பதால் அவர்கள் தங்கள் வீடுகள் போலத்தான் வைத்திருப்பார்கள் என மாவட்டச் செயலகத்தின் சுற்றுச்சூழல் தொடர்பில் கருத்துக்கேட்ட போது, நகரில் சந்திக்க முடிந்த வயோதிபர் ஒருவர் இப்படி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

வடிகாலினுள் குவிக்கப்பட்ட குப்பை

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள வடிகால் மீது வைக்கப்பட்ட மிதித்தட்டு உடைந்துள்ளது.

அதனுள் அதிகளவான குப்பைகள் போடப்பட்டுள்ளன.நீர் வடிந்தோட வேண்டிய வடிகாலினுள் குப்பைகளை போட்டுக்கொள்ளும் பண்பாடுடைய மக்கள் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

மாவட்டச் செயலகத்தினைச் சூழவுள்ள வடிகால்கள் சுத்தமாக பேணப்படும் போது அவையும் அழகிய கட்டமைப்புத் தோற்றத்தை சூழலுக்கு கொடுக்கத் தவறாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நினைவுத்தூபி

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பிற்பகுதியில் இராணுவ நினைவுத்தூபி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அந்த நினைவுத்தூபி இராணவ வீரர்களால் பராமரிக்கப்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த இராணுவ நினைவுத்தூபி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

இங்கே இராணுவ நினைவுத்தூபியில் பேணப்படும் சுற்றாடல் தூய்மையை அவதானித்து அது போல் மாவட்டச் செயலகத்தின் வெளிச்சூழலையும் பராமரித்துக்கொள்ள முடிந்தால் நன்று.

இராணுவ நினைவுத்தூபி மற்றும் மாவட்டச் செயலகம், அருகிலுள்ள உணவகம் என்பவற்றை எல்லைகளாக பகிர்ந்து கொள்ளும் குப்பை குவியல் ஒன்றும் இருப்பது முகம் சுழிக்கச் செய்யும் செயற்பாடாகும்.

இது தொடர்பில் மாவட்டச் செயலகம் விரைந்து துரித நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இந்தச் செயற்பாடுகள் முல்லைத்தீவு நகரின் அழகிய கட்டமைப்புப் தோற்றத்திற்கு வித்திடுவதாக அமையும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

கவனமெடுப்பார்களா அதிகாரிகள் 

முல்லைத்தீவு நகரின் தூய்மை மற்றும் நேர்த்தியான கட்டமைப்பு, அவற்றின் பராமரிப்புக்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகமே அதிகளவில் கருத்திலெடுத்து செயலாற்ற வேண்டிய நிறுவனமாக இருக்கின்றது.

அதனோடு முல்லைத்தீவு நகரசபை மற்றும் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் சங்கம் போன்றனவும் இது தொடர்பில் கவனமெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.

முதன்மை அரச நிறுவனங்கள் தங்கள் அகச் சூழல் மற்றும் புறச்சூழலை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பேணிப் பராமரித்துக் கொள்ளும் போது ஏனைய அரச நிறுவனங்களும் அவ்வாறே செயற்படத் தொடங்கும்.

இந்த மாற்றம் அந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசுப்பணியாளர்களின் வீடுகளிலும் ஏற்படுத்தப்படும். இவ்வாறன நகர்வு ஆரோக்கியமான சமூக மாற்றமாக மாற்றம் பெறும் என சமுகவியல் கற்றலாளர் வரதனுடன் இதுதொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இத்தகைய மாற்றங்களுக்கும் பராமரிப்புக்களுக்கும் உடலுழைப்பும் சிறந்த கலையுணர்வுடன் கூடிய சிந்தனையும் இருந்தால் காணும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிந்தித்துச் செயற்பட்டு,மாற்றங்களை ஏற்படுத்துவார்களா என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும்.

NO COMMENTS

Exit mobile version