Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

பொதுத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

0

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், காவல்துறை பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கு மேலதிகமாக, நவம்பர் 4 ஆம் திகதியும் குறித்த அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் நவம்பர் மாதம் முதலாம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்கு  நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் உத்தியோகத்தர்கள் 

பயன்படுத்தப்பட்ட தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகளை இன்று முதல் ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.

இவ்வருட பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஏறக்குறைய ஆயிரம் உத்தியோகத்தர்களை பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி (Rohana Hettiarachchi) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version