Home இலங்கை சமூகம் பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

0

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)  அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னதாக திட்டமிட்டிருந்தது.

வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்

வைத்தியர்களுக்கான இடமாற்றம் தற்போது முறையற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதனால் நாடளாவிய ரீதியில் 200 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுகிறதாகவும் அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சம்பள அதிகரிப்பு, மேலதிக கொடுப்பனவு, மற்றும் இதர சலுகைகளை முன்னிலைப்படுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவில்லை எனவும் இலங்கையில் இலவச மருத்துவ துறையை பாதுகாப்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.

இதேவேளை நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை நேற்று (24) மாலை 4 மணி முதல் கைவிட்டு திட்டமிட்டபடி தங்கள் கடமைகளைச் செய்ய ஒப்புக்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version