கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு (India) 1,670 மில்லியன் ரூபா மதிப்பிலான 267 கிலோ தங்கத்தை இரகசிய குழுவினர் கடத்தி சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டமை குறித்து சென்னை விமான நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, சென்னை (Chennai) விமான நிலையத்தினுள் அமைந்துள்ள கடையொன்றை மையப்படுத்தி இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
விமான நிலைய கடை
குறித்த கடையின் உரிமையாளர் ஒருவரின் சந்தேகத்திற்குரிய நடத்தையை அவதானித்த அதிகாரிகளால் அவரைக் கைது செய்தபோது, அவரது உடலில் பல தங்கத் துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், உரிமையாளர், விமானப் பயணி ஒருவரிடம் இருந்து தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளதுடன் இலங்கையைச் சேர்ந்த ஒரு குழுவினர் இந்த கடையை வாடகைக்கு எடுத்து 8 ஊழியர்களை பணியில் அமர்த்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னரே மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.