யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பான உண்மையான நிலையை அறிந்துகொள்ள தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் விளக்கம் கோரி இருந்தது அதற்கான பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டம்
தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பின் விளக்கம்
1. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
2. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க SHDP (இரண்டாவது) என்கின்ற 5 ஆண்டு திட்டத்தில் தான் கட்டுமான வேலைகள் நடைபெற்றது. அதனால் இதற்கு என்று தனி திட்டம் (Master Plan ) போடப்படவில்லை, இதற்கான கட்டுமான வேலைகள் யாவும் கட்டிடங்கள் திணைக்களம் ஊடாகவே விலைமனுக்கள் கோரப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.
3. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க கீழ்வரும் முறையில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- 2015ஆம் ஆண்டு – 15மில்லியன்
- 2016ஆம் ஆண்டு – 41.49மில்லியன்
- 2017ஆம் ஆண்டு – 35.38மில்லியன்
- 2018ஆம் ஆண்டு – 26மில்லியன்
- 2020ஆம் ஆண்டு – 2.00மில்லியன்
- 2021ஆம் ஆண்டு – 2.56மில்லியன்
- 2021ஆம் ஆண்டு – 4.93மில்லியன்
- 2022ஆம் ஆண்டு – 3.96மில்லியன்
- 2022ஆம் ஆண்டு – 0.43மில்லியன்
- 2023ஆம் ஆண்டு – 3.56மில்லியன்
- 2023ஆம் ஆண்டு – 16.91மில்லியன்
- 2023ஆம் ஆண்டு – 2.654மில்லியன்
- 2023ஆம் ஆண்டு – 6.69மில்லியன்
- 2024ஆம் ஆண்டு – 12.00மில்லியன்
- 2024ஆம் ஆண்டு – 25.20மில்லியன்
- 2024ஆம் ஆண்டு – 3.59மில்லியன்
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அதில் 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அரச தகவல் ஊடாக நிரூபணம் ஆகியுள்ளது.
எனவே மருத்துவர் அருச்சுனா கூறி இருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கு உண்மை உள்ளது என்றால் அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் முன்வைக்க வேண்டும் என்று பசுந்தேசம் அமைப்பு பகிரங்கமாக கோரிக்கை முன்வைக்கின்றதாகவும் கூறியுள்ளது.