Courtesy: Sivaa Mayuri
சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) நிர்ணயிக்கப்பட்ட கடுமையான வருமான இலக்குகளுக்கு இணங்க, 2025 – வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக ஒரு மாதத்திற்குள், நீண்டகால தாமதமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் போன்ற மிக அத்தியாவசியமான இறக்குமதிகளுக்குக் கூட அன்னியச் செலாவணி இல்லாமல் போனதால், 2022 ஏப்ரலில் இலங்கை தமது 46 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியவில்லை என்று அறிவித்தது.
சிக்கனச் சீர்திருத்தங்கள்
எனினும், சர்வதேச நாணய நிதிய மீட்புப் பொதியைப் பெற்று, அரசாங்கத்தின் சரிவடைந்திருந்த நிதிகளில், சிக்கனச் சீர்திருத்தங்களை கொண்டு வந்த நிலையில், தற்போது, நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது.
இந்தநிலையில், கடன் மறுசீரமைப்பு இரண்டு வருடங்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்டு உள்ளமையால், நாட்டிற்கு 1.7 பில்லியன் டொலர்கள் திரட்டப்பட்ட வட்டியில், கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எனவே, இருதரப்பு கடன் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பை 2024 டிசம்பர் 31க்குள் நிறைவுறுத்த முயல்வதாக பெர்னாண்டோ கூறியுள்ளார்.