அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்தார். எனினும், தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சந்தையில் பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போதைய அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த தவறியுள்ளது. வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
சந்தையில் அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தாலும், தற்போது மக்கள் தவறிழைத்து விட்டதாக உணர்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது ஆட்சிக்கு வர எத்தனை வாக்குறுதிகளை அளித்தாலும் இன்று நிறைவேற்ற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
நாட்டை ஸ்திரப்படுத்திய ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீழ்ந்த நாட்டை ஸ்திரப்படுத்தி, சாதகமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க எடுத்த நடவடிக்கைகள் சரியானவை என்பதாலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் எந்த மாற்றமும் இன்றி அந்தப் பாதையில் தொடர்கிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு வழங்கும் நோக்கில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்திருந்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தது. ஆனால் இன்று அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கனவாகிவிட்டது.
எரிவாயு, மின்சாரம், வரி குறைக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தாலும் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்ததாக தெரியவில்லை. அதற்கான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, மக்கள் நாளுக்கு நாள் கடனாளிகளாக மாற்றப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.