Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

0

கடந்த அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எனினும், ஆட்சி மாற்றம் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது  என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா(Nimal Lanza) தெரிவித்துள்ளார். 

நீர்கொழும்பில்(Negombo) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்புக்கு ரணில் எடுத்த நடவடிக்கை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் கட்சியின் தலைவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முன்னர் ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்திய போதிலும், குறித்த தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களித்தனர்.

ஆனால் இன்று என்ன நடந்துள்ளது?

அரச ஊழியர்களின் போராட்டம் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக உதய சேனவிரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழு சம்பள அதிகரிப்புக்கான பரிந்துரைகளையும் முன்வைத்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஸ்திரப்படுத்தியதால், உதய ஆர் செனவிரத்ன குழுவினால் முன்மொழியப்பட்ட சம்பள அதிகரிப்பை அவரால் நடைமுறைப்படுத்த முடிந்தது. இதன்படி, குறைந்தபட்ச ஊதியத்தை 55,000 ஆகவும், 25,000 ரூபா சம்பள அதிகரிப்பையும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

ஆனால் ஆட்சி மாற்றத்தால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

ஆனால் 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேலும் உயர்த்துவோம் என்று தெரிவித்த ஜே.வி.பி. இன்று அதனை மறுக்கிறது.

அரசு ஊழியர்கள் திசைகாட்டி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அந்த நம்பிக்கையை அரசாங்கம் தற்போது இழந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version