அனைத்து அரச நிதி பரிவர்த்தனைகளும் பொது நிதி முகாமைத்துவ சட்டத்தை பின்பற்ற
வேண்டும் என்று சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த பரிந்துரை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின்
ஆட்சேர்ப்பு மற்றும் நிதியை நிர்வகிக்கும் போது ஊழல் எதிர்ப்புச் சட்டம்
நடைமுறையில் உள்ளதா என்பது குறித்து, சபாநாயகர், சட்டமா அதிபரிடம் விளக்கம்
கோரியிருந்தார்.
இரண்டு சட்டங்களுக்கிடையேயான முரண்பாடுகள் காரணமாக தனது அதிகாரங்களைச்
செயல்படுத்துவதில் தான் எதிர்கொள்ளும் சிரமங்களை இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான
ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திசாநாயக்க சபாநாயகரிடம் தெரிவித்ததைத்
தொடர்ந்து, சபாநாயகர் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவிடம், சபாநாயகர் விளக்கம்
கோரியிருந்தார்.
இந்த நிலையில், பொது நிதிக்கு நாடாளுமன்றம் பொறுப்பு என்பதால், பொது நிதியைப்
பயன்படுத்தும் அனைத்து அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களும் திறைசேரியின் கீழ்
சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டு திட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், அனைத்து
ஆட்சேர்ப்புகளும் சம்பளம் மற்றும் பணியாளர் ஆணையகம் மூலம் செய்யப்பட வேண்டும்
என்றும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் சட்டம்
இருப்பினும், கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு, சில பதவிகளுக்கு ஆட்சேர்ப்புகளை
தானாகச் செய்ய முடியும் என்றும், அதே நேரத்தில் ஆணையகத்தின் அதிகாரங்களுக்கு
உட்பட்டு சில நிதிகளைச் செலவிட முடியும் என்றும் சட்டமா அதிபர் கருத்து
தெரிவித்துள்ளார்.
இருப்பினும், செலவுகள் பாதீட்டின்; முன்மொழிவுகளுக்கு உட்பட்டதாக இருக்க
வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே சட்டத்தின் விளக்கத்தில், நிதி அமைச்சருடன் கலந்தாலோசித்து, தமது
பாதீட்டை முடிவு செய்வதற்கும், அதன் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும்
சட்டம் ஆணையகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது என்று இலஞ்ச ஊழலுக்கு எதிரான ஆணையகம்
கூறி வந்தது.
இருப்பினும், அனைத்து ஊழியர்களின் எண்ணிக்கையும் சம்பளமும் அமைச்சகத்தின்
மூலம் செய்யப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி வருகின்றது.
