Courtesy: Sivaa Mayuri
இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நலன்புரி வரவு செலவுத்திட்ட நிதியில், கடந்த ஆகஸ்ட் வரையிலான முதல் 8 மாதங்களில், 53வீத நிதியை மாத்திரமே அரசாங்கம் செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சகத்தின் அண்மைய அறிக்கையின்படி, நலன்புரி வரவு செலவுத் திட்டம் முதன்மையாக ‘அஸ்வெசும’ நலத்திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் 3 முதல் 5 வருடங்களுக்குள் இலங்கை பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 1.69 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியுதவி
2024 ஆகஸ்ட் இறுதி வரையில், வெளிநாட்டு வளர்ச்சி பங்காளிகள் மற்றும் கடன் வழங்கும் முகவர்கள் மொத்தம் 398.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நிதியுதவிக்காக அரசாங்கத்துடன் 10 ஒப்பந்தங்களை செய்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 350 மில்லியன் டொலர்கள் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
மேலும் 48.7 மில்லியன் டொலர்கள், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுடன் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் ஏழு மானிய ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கி 2024 ஆகஸ்ட் வரை இலங்கைக்கு 358.3 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது, உலக வங்கி 239.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இதேவேளை அறிக்கை தரவுகளின்படி, 1,055.7 பில்லியன் நலன்புரி நிதியில் 562.4 பில்லியன் ரூபாய் இந்தக்காலப்பகுதிக்குள் செலவிடப்பட்டுள்ளது.