இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும், திருகோணமலையில்
உள்ள ஒரு பிரபலமான விஹாரையில் இருந்து புத்தர் சிலை சமீபத்தில் அகற்றப்பட்டது
தொடர்பாக தெளிவான விளக்கத்தை வழங்கத் தவறிவிட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது துறைசார்
அமைச்சர் உரிய பதிலை வழங்கவில்லை என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
புத்த பிக்குகளை தாக்கியது யார்
“புத்தர் சிலையை அதன் பாதுகாப்புக்காக வெளியே கொண்டு சென்றால் புத்த
பிக்குகளைத் தாக்கியது யார் என்று கேட்டபோது, அரசாங்கம் இன்னும் அந்தக்
கேள்விக்கு பதிலளிக்கத் தவறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நவம்பர் 21 ஆம் திகதியன்று நுகேகொடையில் நடைபெற உள்ள பேரணியில்,
இது தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று நாமல் ராஜபக்ச
தெரிவித்துள்ளார்.
இதேவேளை போதுமான வெளிப்படைத்தன்மை இல்லாமல் வெளிநாடுகளுடன் பல ஒப்பந்தங்களை
மேற்கொண்டதற்காக அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார்.
அத்தியாவசிய மருந்துகளை சரியான நேரத்தில் அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது.
எனினும் 1,700 கெப் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம்
அவசரப்படுவதாகவும் நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
