போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் வணிகத் துறைக்கு எதிரானதல்ல என்பதை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், தற்போது நாட்டின் பெரும்பாலான வர்த்தகர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி – இறக்குமதி வசதிகள்
புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு பெரிய மற்றும் சிறு நடுத்தர நிறுவனங்களைக் கேட்டுக்கொண்ட அவர், இத்தகைய வாய்ப்புகளைப் பெறுவதற்கு அரசியல் தொடர்புகளோ அல்லது நட்புறவுகளோ தேவையில்லை என்றும் உறுதியளித்தார்.
குறிப்பாக நாட்டின் தளவாடப் போக்குவரத்து (Logistics) மற்றும் போக்குவரத்துத் துறைகளில் முதலீட்டுக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், போதிய சேமிப்புக் கிடங்கு வசதியின்மை மற்றும் வீதி சார்ந்தப் போக்குவரத்தை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பது போன்ற குறைபாடுகளால் உள்நாட்டுப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு உயர்வாகவே உள்ளது என்றார்.
கொள்கலன்கள் மற்றும் மொத்தப் பொருட்களைக் கொண்டு செல்ல தொடருந்து நெட்வொர்க்கை திறம்படப் பயன்படுத்த முடியும் என்றும், அதற்குத் தேவையான முனையங்கள் மற்றும் ஏற்றுமதி – இறக்குமதி வசதிகளை ஏற்படுத்துவதுடன் தொடருந்து திணைக்களத்தில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வணிகர்களும் பொதுமக்களும் பெரும் வரிச்சுமையை எதிர்கொள்வதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், 2027 ஆம் ஆண்டில் அவர்களுக்கு வரி நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதியும் அமைச்சரவையும் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
YOU MAY LIKE THIS..
Source: https://tamilwin.com/article/govt-anti-business-tax-relief-2027-bimal-1788520885
