Home இலங்கை பொருளாதாரம் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு: நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு: நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

0

அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதி அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya )  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை பெற்று கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

அமைச்சரவை அனுமதி

 நாம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 இலட்சத்து 80,000 அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.

ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம். அவர்களுக்கு மேலும் 3000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.

வரிச்சுமையும் காணப்படுவதால் வரிகளை குறைக்க வேண்டியுள்ளது.
முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மேற்கொள்வது அவசியம்.

சம்பள அதிகரிப்பு

அதனைக் கவனத்திற் கொண்டே உதய ஆர் செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் எந்த அரசியல்வாதிகளும் பங்கேற்கவில்லை. நிதியமைச்சு உட்பட அரச அதிகாரிகளே இடம் பெற்றனர்.

அந்தக் குழு இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. எதிர்காலத்தில் எவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பான பரிந்துரையை அதில் உள்ளடக்கியுள்ளது.

அந்த இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அந்த இடைக்கால அறிக்கையில் தற்போதுள்ள அனைத்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு 25,000 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version