நடைபெற்று முடிந்த 2024ம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் (Grade 5 Scholarship Examination) 3 வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சு (Ministry of Education) மற்றுமொரு குழுவினை நியமித்துள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) ஆலோசனையின் பேரில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் அந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் தீர்மானம்
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு
இந்த நிலையில், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பெற்றோர் குழுவினர் எட்டு வினாக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழு வெளியான வினாக்களின் எண்ணிக்கை தொடர்பில் விரிவாக ஆராய உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.