Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சைத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்க நடவடிக்கை

புலமைப்பரிசில் பரீட்சைத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்க நடவடிக்கை

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள மூன்று வினாக்களைப் போன்ற வினாக்களை உள்ளடக்கிய மாதிரித்தாள் ஒன்றை ஆசிரியர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்நவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

குறித்த தகவலிற்கமைய, அநுராதபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் உட்பட ஆறு ஆசிரியர்களை பரீட்சை திணைக்களம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. 

விசாரணை நடவடிக்கை 

இதன் பின்னர், கடந்த 15 ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை வினாத்தாளை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து பல ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  இன்றைய தினம் (17) புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு, கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு குறித்த மூன்று வினாக்களையும் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது. 

மேலும், இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அறிக்கை ஒன்றினை பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version