Home இலங்கை சமூகம் இலங்கை பாடசாலைக்கு விஜயம் செய்த இந்திய பாடசாலை மாணவர் குழு

இலங்கை பாடசாலைக்கு விஜயம் செய்த இந்திய பாடசாலை மாணவர் குழு

0

Courtesy: uky(ஊகி)

இலங்கை – இந்தியா மாணவர்களுக்கிடையே நட்புறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பாடசாலை மாணவர் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த மாணவர் குழுவில் 14 மாணவர் மாணவிகளும் 2 ஆசிரியைகளும் உள்ளடங்குவதோடு அவர்கள் கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர்.

வரவேற்பு 

இம்மாணவர்களுக்கு விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு மாணவர்களுக்கிடையிலான கலாசார நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு பாடசாலை அதிபர் நதீரா இஸ்மாயீல் தலைமையில் இடம்பெற்றது.

பிரதி அதிபர் இம்தியாஸா பாரூக நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் பி. சோமராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கண்டி கல்வி வலயத்தின் ஆங்கிலப் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் தீப்தி பிரியதர்சனி மற்றும் பாடசாலை மாணவிகள் ஆசிரியைகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கல்வி நட்புறவு

இத்தகைய கல்வி நட்புறவுப் பயணங்கள் மாணவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்கால சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.

பிராந்திய நாடுகளிடையே சிறந்த நட்புறவுடன் கூடிய சமூகத்தினை கட்டியெழுப்புவதோடு பரஸ்பர உதவிகளையும் பெற்றுக்கொள்ள இது அடித்தளம் இடும்.

நாடுகளுக்கிடையே மாணவர்கள் மேற்கொள்ளும் நட்புறவுப் பயணங்களை கல்விச் செயற்பாட்டின் ஒரு அங்கமான கல்விச்சுற்றுலாவுக்குள் இலகுவாக திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

இப்பயணத்தின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பிலும் இரு நாட்டு சமூகங்களின் கலை, கலாசார ஆய்வுகள் தொடர்பில் மாணவரிடையே ஆர்வத்தை ஊட்டிவிடும் வகையில் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுதல் வரவேற்கப்படக்கூடியது என சமூகவியல் கற்றலில் ஈடுபட்டுவரும் வரதனுடன் இதுதொடர்பில் மேற்கொண்ட உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.

உள்நாட்டு பாடசாலைகள்

உள்நாட்டு பாடசாலைகளுக்கிடையிலும் நட்புறவு பயணங்களை திட்டமிடுதல் அவசியமானதாகும்.

பிரதேச புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர உதவிகளையும் பரிமாறிக் கொள்ளல் என்ற அடிப்படையில் உதவக்கூடியதாக அது இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பல்லின சமூகங்களைக் கொண்ட நாட்டில் சமூகங்களுக்கிடையே நிலவும் மத , கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் மீதான அறிதலும் புரிதலும் மாணவரிடையே அவற்றின் மீதான மதிப்புணர்வை ஏற்படுத்தி விடும்.

சமூகங்களுக்கிடையில் தோன்றும் விரிசல்களை எதிர்காலத்தில் குறைத்துக் கொள்ள இந்த முயற்சி பாரியளவில் பங்கு வகிக்கும்.

அத்தோடு,வளப்பற்றாக் குறையுடைய பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் இத்தகைய பயணங்களின் மூலம் வளம்பெற்ற பாடசாலைகளில் சார்ந்திருந்து பயன்பெற முடியும்.இது இலங்கை போன்ற நாட்டுக்கு இப்போது அணுகூலமிக்க ஒரு செயற்பாடக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கல்விசார் சமூகத்தினர் இது தொடர்பில் கருத்தில் எடுத்து செயற்பட்டால் கிரமமான முறையில் இதனை முன்னெடுத்துச் செல்லும் போது பாரியளவிலான மாற்றங்களை எதிர்கால சமூகத்தின் காணலாம் என்பது திண்ணம்.

NO COMMENTS

Exit mobile version