Home இலங்கை சமூகம் கொட்டாஞ்சேனை மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்: குற்றச்சாட்டுகளை மறுக்கும் NPP அமைப்பாளர்

கொட்டாஞ்சேனை மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்: குற்றச்சாட்டுகளை மறுக்கும் NPP அமைப்பாளர்

0

கொட்டாஞ்சேனையில் (Colombo 13 ) மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான சிவானந்த ராஜா முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்து இன்று மாலை (09.05.2025) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். 

உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான விமர்சனங்கள் 

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். 

கட்டாய விடுமுறை

பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதேவேளை, கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறை பீ அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அதற்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/tULs4PIIDyQ

NO COMMENTS

Exit mobile version