Home இலங்கை சமூகம் கோப்பாய் பொலிஸ் நிலைய காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை

கோப்பாய் பொலிஸ் நிலைய காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை

0

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன்
உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளையதினம்(15.10.2025) புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம்
கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையம்,
கடந்த 30 வருடங்களாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது.

அந்தக் காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு
தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

வழக்கின் தீர்ப்பு

எனினும், அதற்கு பலன் கிட்டவில்லை.

இந்தநிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 9 உரிமையாளர்கள்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். 

வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த
ஜூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்போது, பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்தக் காணியை
உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன்
உத்தரவிட்டார்.

முழுமையான இடமாற்றம்

எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிஸார் காணியை
உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.

இந்தநிலையில், நாளையதினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற
பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று, அங்குள்ள
பொலிஸாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

அதேவேளை, கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும்
நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள்
முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version