முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதுண்டதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (13) பளை – இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து (Colombo) யாழ்ப்பாண நோக்கி பயணித்த யாழ். தேவி தொடருந்துடன் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் பளை – வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் படுகொலை செய்யப்பட்டது உறுதி
இதேவேளை, யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது சடலம் இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட மருத்துவ அதிகாரி செ. பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது, அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.
அந்தப் பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலில் வீசப்பட்டுள்ளார். அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியான போதும், உடற்கூறாய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
